சென்னை வருகை
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் இன்று மாலை நடக்கிறது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் இன்று காலை 11.15க்கு சென்னை வந்தார்.
உற்சாக வரவேற்பு
சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட நரேந்திர மோடி தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருவிடந்தை பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தார்.
அங்கிருந்து கோவளம் பகுதியில் அமைந்திருக்கும் தாஜ் ஃபிஷர்மென்ஸ் கோவ் விடுதிக்குச் சென்றார். அவருக்கு தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பளித்தார். பிரதமருடன் ஆளுநரும் திருவிடந்தை பகுதிக்கு வந்துள்ளார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருவிடந்தையில் பிரதமர் மோடியை அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் வரவேற்றனர்.
திருவிடந்தையிலிருந்து பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக கோவளம் புறப்பட்டுச் சென்றார். சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னை விமான நிலையம் முதல் கிண்டியின் ஐ.டி.சி வரையிலான போக்குவரத்து 1.30 மணியிலிருந்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுவருகிறது. முன்னதாக சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டியில் முழக்கம் செய்த ஐந்து திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.