பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வைத்த பேனர் சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும் தமிழ்நாடு அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. அதுமட்டுமின்றி எதிர்க்கட்சியினரும் ஆளும் அரசை கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழ்நாட்டில் அலட்சியக் கொலைகள் இன்னும் நடந்துகொண்டே இருக்கின்றன. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும். அலட்சியக் கொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இல்லை. பேனர் மரணங்களை தடுத்து நிறுத்திட வேண்டியது நமது கடமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சாதாரண மக்கள்தான் அசாதாரண தலைவர்களை உருவாக்குகிறார்கள் சுபஸ்ரீ விவகாரத்தில் காலம் பதில் சொல்லும். எதிர்த்துக் கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதும், தப்பை தட்டிக்கேட்டால் நாக்கை அறுப்பேன் என கூறுவதும்தான் இவர்களுக்கு தெரிந்த அரசியல்” எனப் பேசி கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.