சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியானபிறகு பொறியியல் கலந்தாய்வை நடத்துவதற்கு தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு முடிவு செய்துள்ளதால் பொறியியல் கலந்தாய்வை, ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, வரும் ஆக.16 ஆம் தேதிக்குப் பதிலாக மற்றொரு தேதிக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், பொறியியல் கலந்தாய்வை நடத்தினால் முன்னணி கல்லூரிகளில் பொறியியல் இடங்களைத்தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், நீட் முடிவுக்கு பின்னர் மருத்துவப்படிப்பிற்கு, பொறியியல் இடங்களை விடுத்து வெளியேறுவதால் நீட் முடிவுக்கு பிறகே பொறியியல் கலந்தாய்வு நடப்பாண்டில் நடத்தப்படும்.
பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் 2022-23ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பாெறியியல் மாணவர் சேர்க்கை குழுவால் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரையில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 மாணவர்கள் விண்ணப்பங்களைப்பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 67ஆயிரத்து 387 மாணவர்கள் கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 1 லட்சத்து 56 ஆயிரத்து 214 மாணவர்கள் சான்றிதழ்களை முழுவதுமாகப் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் விளையாட்டுப்பிரிவின்கீழ் உள்ள 500 இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த 2442 வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக.1 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் நடைபெற்றது. மேலும், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்த மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
அதனைத்தொடர்ந்து, பொறியியல் படிப்பிற்கான தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டாலும், கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே நடத்தப்படும் எனத்தெரிகிறது.
இதையும் படிங்க: செல்போன் சிக்னல், இணையதளம் என துளியும் தொலைத்தொடர்பு இல்லாத நடுக்காட்டில் உருவாகும் முதல் பட்டதாரி பெண்!