சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பிட்டி தியாகராய அரங்கத்தில் தமிழ்நாடு அமைச்சர் மூர்த்தி தலைமையில் பதிவுத் துறையின் சென்னை மண்டலப் பணி சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பதிவுத் துறை அரசு செயலர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத் துறைத் தலைவர் சிவனருள் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பொதுமக்களிடம் கனிவாகப் பேச அறிவுறுத்தல்
இதில், அனைத்துப்பதிவு அலுவலர்களும் பொதுமக்களிடம் கனிவாகப் பேசி, அவர்களின் சந்தேகங்களைப் போக்கி அவர்களுக்கு மனநிறைவான அனுபவத்தினை ஏற்படுத்தித் தர வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், பதிவு அலுவலர்கள் அனைவரும் எவ்வித புகாருக்கும் இடமின்றி நடந்துகொள்ள வேண்டும் எனவும், வெளிப்படைத் தன்மையைக் காக்க வேண்டும் எனவும் அமைச்சர் அலுவலர்களை வலியுறுத்தினார்.
பத்திரப்பதிவு தொடர்பான புகார்
பத்திரப்பதிவு அலுவலர்கள், பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை 9498452110, 9498452120, 9498452130 என்ற அலைபேசி வழியாக பொதுமக்கள் தெரிவிக்கலாம் அல்லது வாட்ஸ்அப் மூலமும் புகார்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதியளித்தார்.
அரசு வருவாயைப் பெருக்க நடவடிக்கை
அரசின் வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம் செலுத்த அனைத்து அலுவலர்களையும் பதிவுத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார். நிலுவை ஆவணங்கள் சரியாக இருப்பின் அதனை உடனடியாக விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களைத் தாமதமின்றி பதிவுசெய்தல் முதலான யுக்திகளைக் கையாண்டு வருவாயைப் பெருக்க அரசு செயலரால் அறிவுறுத்தப்பட்டது.
அதிகளவில் பத்திரப்பதிவு நிலுவையிலுள்ள அலுவலகங்களை மாதந்தோறும் துணைப் பதிவுத் துறைத் தலைவர், மாவட்டப் பதிவாளர்கள் திடீர் ஆய்வு, இதர ஆய்வுகளின்போது கண்டறிந்து நிலுவையினைக் குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
புகார்களின் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, "பத்திரப்பதிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கப்படும். ஜூன் 17 முதல் 24ஆம் தேதிவரை தொலைபேசி வழியில் 358 புகார்களும், வாட்ஸ்அப் வழியாக 573 புகார்களும், மின்னஞ்சல் வழியாக 60 புகார்களும் வந்துள்ளன. இவை மாவட்டப் பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டு புகார்களின் தன்மைக்கு ஏற்ப விரைந்து நடவடிக்கை எடுக்கவும், தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முத்திரைத்தாள் வரியைக் குறைப்பது சாத்தியம் இல்லை
பதிவுத் துறை இணையதளத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டப் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்துப் பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், பதிவுப்பணி ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, புகார்களைக் களைய ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி எண் போன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு செய்யப்படும். தற்சமயம் தமிழ்நாடு அரசுக்கு கடன் அதிகமாக இருப்பதால் முத்திரைத் தாள் வரியைக் குறைப்பது சாத்தியம் இல்லை" என்றார்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவை தடுக்க புதிய நடைமுறை