சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை மார்ச் 2ஆம் தேதியான நேற்று வெளியானது.
அந்த அறிவிப்பில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு, அதற்கு வரும் மே 21ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான தொழிற்கல்வி பாடத்துக்குத் தேர்வு என்பதைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் தொழிற்கல்வி பாடத்துக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
தொழிற்கல்வி மதிப்பெண்கள் அவசியமல்ல
இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தையும் தமிழ்நாடு அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்றும்; மாநிலம் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழிற்கல்வி பாடத்தைப் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மேலும், 10ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரை 500 மதிப்பெண்களுக்கே தேர்வு நடத்தப்படுகிறது.
மேலும், தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும்; அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதும் அவசியமல்ல என்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி தற்கொலை: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை தாக்கல்