போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் "ஹெல்மெட் இல்லை, என்றால் பெட்ரோல் இல்லை, சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல், டீசல் இல்லை" என்ற விழிப்புணர்வு வாசகங்களை பெட்ரோல் பங்குகளில் இடம்பெற செய்வதை போக்குவரத்து காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தவிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட பெட்ரோல் சப்ளை அலுவலருடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெட்ரோல் விற்பனையாளர்கள் கூறுகையில், "ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தை போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவின் அடிப்படையில் காட்சிப்படுத்துவோம். ஆனால், வாசகத்தில் உள்ளபடி ஹெல்மெட் இல்லையெனில், கட்டாயம் பெட்ரோல் வழங்க மாட்டோம் என தெரிவிக்க முடியாது. ஏனெனில், இதற்கான அரசாணை எதுவும் பிறப்பிக்காத போது, ஹெல்மெட் இல்லையெனில் பெட்ரோல் இல்லை என வாகன ஓட்டிகளிடம் எங்களால் தெரிவிக்க முடியாது" என்றனர்.
மேலும், உரிய அரசாணை பிறப்பிக்காமல் ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு, பெட்ரோல் இல்லை என தெரிவித்தால் பங்க் ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்படும் என்று பங்க் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.