சென்னை: விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, “அமித் ஷா என்ன தீவிரவாதியா எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்த. கையில் என்ன ஏ.கே.47வுடனா வருவார். குடியரசு பெற்ற நாட்டில் யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழ் மண்ணில் அமித் ஷாவை கண்டு யாரும் பயப்பட மாட்டார்கள். பாஜக தலைவர் எல். முருகன் கற்பனையில் வாழ்கிறார். உண்மையான உலகிற்கு வர வேண்டும்.
பிகார் மாநிலத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி பெறாதவர்களுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 12700தான். இந்தியாவில் இவ்வளவு குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஒரு ஆட்சி அமைந்தது கிடையாது. யாரும் இந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்ததும் கிடையாது. பிகார் மாநில தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணிக்கு மாபெரும் வெற்றி தான்.
கூட்டணியில் எந்த கட்சி அதிகமான இடத்தைப் பெற்றுள்ளது; குறைவாக பெற்றுள்ளது என்று பார்ப்பதில்லை. கூட்டணியில் எவ்வளவு இடங்களை பெற்று இருக்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 10 இடங்களைப் பெற்று, அதில் 9 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாட்டிக்காலத்தில் என்ன நடந்தது என்பதை கணக்கில் எடுத்தால் எப்படி சரியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியுள்ள கூட்டணி வெற்றி பெற கூடிய கூட்டணி. மோடியை வெல்ல முடியாது என்றவர்களுக்கு பிகார் தேர்தல் சரியான படிப்பினை. மோடியை வீழ்த்த முடியும் என்பதை பிகார் தேர்தல் நிரூபித்துள்ளது” என்று அவர் கூறினார்.