சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிர்லா கோளரங்கத்தில் நடந்துவரும் இக்கண்காட்சியை, பொதுமக்கள் காலை முதல் மாலை வரை இலவசமாக நேரில் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியினை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் பர்ஜெஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நீரினை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது, நீரை சேமிப்பதில் உள்ள தொழில்நுட்பங்கள், முன்னோர் செய்த நீர் மேலாண்மை உள்ளிட்ட பலத் தகவல்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ’நீரின்றி அமையாது உலகு’ என்றத் தலைப்பில் நீர் மேலாண்மை குறித்த புகைப்படங்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன.
பிர்லா கோளரங்கத்தில் அமெரிக்கத் துணை தூதரகத்தின் சார்பில் ’சென்னையில் நீர் மேலாண்மை’ குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியை திறந்துவைத்து, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திரை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ”தண்ணீர் என்பது அடிப்படை உரிமை, அதைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். குழாயைத் திறந்தால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். அதில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. தண்ணீர் குறித்து விழிப்புணர்வு முதலில் ஒவ்வொருவரின் குடும்பத்திற்குள் வரவேண்டும். 2017ஆம் ஆண்டு பெய்த கனமழையில் எனது குடும்பமும் பாதிப்பை அனுபவித்துள்ளது.
தண்ணீர் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை ஏற்கெனவே நான் பாடியுள்ளேன். உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடல் இயற்றிக் கொண்டிருக்கிறோம். அதில் உலகளவிலான பலர் பாடியுள்ளனர். இரண்டு மாதத்திற்குள் அப்பாடலை வெளியிட உள்ளோம். தமிழிலும் அப்பாடலை மொழிபெயர்த்துக் கொள்வதில் எவ்வித சிரமமும் இருக்காது” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், உலகத்தில் இன்று தண்ணீர் மிக முக்கிய பிரச்னையாக இருக்கிறது. தண்ணீரை சேமிப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அதனால்தான் அரசு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தியது.
கீழடி ஆய்வில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர் என்பது தெரியவந்திருக்கிறது. இந்தியப் பண்பாட்டில் நதிகள் அனைத்தையும் தெய்வங்களாகக் கருதி வழிபட்டு பாதுகாத்து வந்துள்ளனர். தெப்பத் திருவிழா போன்ற தமிழரின் முதன்மையான திருவிழாக்கள், நீரைப் போற்றி பாதுகாப்பதற்கான விழிப்புணர்வாகவே அமைந்துள்ளன. தமிழகத்தில் வற்றாத ஜீவ நதி என்று புகழ்பெற்ற பல ஆறுகள், இன்று ஜீவனற்று இருப்பதற்குக் காரணம் நாம் பாதுகாக்கத் தவறியதுதான்.
தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நீரியல் ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடத்திட்டங்களுக்கும் முதன்மையிடம் வழங்கப்பட்டு வருகிறது” என்று பேசினார்.
இதையும் படிங்க: பிகில் விவகாரம்: வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்ட 'மாஸ்டர்' விஜய்