சென்னை: இந்திய நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவை ஒட்டி, சென்னையில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி, கரோனா விழிப்புணர்வு வாகனங்களை ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்தபோது, நாளொன்றுக்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 24ஆயிரமாக இருந்து அது படிப்படியாக 36ஆயிரத்தை எட்டியது.
அதன்பிறகு மக்களின் ஒத்துழைப்பு, அரசின் துரித நடவடிக்கை காரணமாக தற்போது கரோனா பாதிப்பு 15 நாட்களாக 2,000க்குள் உள்ளது. அரசின் மூலம் மூன்று மடங்கு கூடுதலாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுவரை 2 கோடியே 75 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
திமுக ஆட்சி ஏற்றபோது, தமிழ்நாடு தடுப்பூசியை 6 விழுக்காடு வீண் செய்யும் மாநிலமாக இருந்தது. 4 லட்சத்து 34ஆயிரம் தடுப்பூசிகளை கடந்த அதிமுக அரசு வீண் செய்தது. தற்போது, கொடுத்த தடுப்பூசிகளை விட கூடுதலாக போடும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 7லட்சத்து 80ஆயிரம் தடுப்பூசிகள் கூடுதலாகப் போட்டு வருகிறோம்" என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய எல். முருகன், "பல்வேறு துறைகளில் பாஜக அரசு முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிதான் கரோனாவிற்கு மருந்து.
தடுப்பூசி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. தேவைக்கேற்ப வழங்கப்பட்டும் வருகிறது. மத்திய அரசு பாகுபாடு பார்ப்பது கிடையாது. தமிழ்நாடு வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு நான் உறுதுணையாக நின்று தோளோடு தோள் கொடுப்பேன்" என்றார்.
இதையும் படிங்க: 'சமூகநீதிக் காவலர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை'