நாகரிகம் வளர வளர காடுகள் அழிக்கப்பட்டு நகரங்களாயின. மனிதர்கள் தங்களின் அத்தியவாசியத்திற்காக காடுகளை அழித்தனர். விலங்குகள் அதற்கு பழி வாங்கும் விதமாக குடியிருப்புகளில் நுழைய ஆரம்பித்தன. காடுகள் சுருங்கியதால் விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் அவ்வப்போது தண்ணீரை தேடி கிணற்றுக்குள் தடம் புரளும் விலங்குகளும் ஏராளம்.
அதிலும் சில விலங்குகள் மனிதர்கள் வீணாக தூக்கி வீசும் உணவிற்கு காத்திருந்து காலங்களை கடத்துகின்றன. அவைகளில் முக்கியமானவை குரங்கினங்கள். நாம் உணவு கொடுத்து பழக்கி பழக்கியே நாளடைவில் தங்களுடைய சுயத்தை இழந்த குரங்குகள் சோர்ந்து நம்மை சார்ந்து வாழ ஆரம்பித்தன. குறிப்பாக சுற்றுலா தளங்களில் பயணிகள் அளிக்கும் உணவுக்காக காத்திருக்கும் குரங்குகளை நாம் பார்த்திருப்போம். சில இடங்களில் தன்னார்வலர்கள் பலர் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கதையையும் நாம் கேட்டிருப்போம்.
ஆனால் தற்போது ஊரடங்கின் காரணமாக பொதுமக்களே உணவிற்காக வாடும் நிலையில், வாயில்லா குரங்குகள் எங்கு போய் உணவு கேட்கும். யாராவது உணவு தருவார்களா என்று எதிர்பார்த்தே நாள்களை கடத்துகின்றன குரங்குகள். சில இடங்களில் கிடைக்கும் சிறிய அளவிலான உணவிற்கு குரங்கு கூட்டங்கள் மொத்தமாக சண்டையிட்டு கொள்கின்றன. அண்மையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் வாழும் குரங்குகள் பசிக்காக கற்களை அள்ளித் தின்றன. இன்னும் பல கொடுமைகளை இந்த குரங்குகள் அனுபவிக்கின்றன.
![குரங்குகளிலிருந்து மனிதர்கள் வந்தார்கள் என்பர். தற்போது மனிதர்களால் குரங்குகள் இறக்கும் நிலை வந்துள்ளது.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6959840_jff.jpg)
குரங்குகள் என்றாலே அவைகளின் குதூகலமும் செய்யும் சேட்டைகளும் தான் நம் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தற்போது நிகழ்ந்து வரும் மாற்றங்களால் இனி குரங்குகள் என்றாலே அவைகள் பசியால் துடித்து இறக்கும் புகைப்படங்கள் தான் நம் ஞாபகத்திற்கு வரும். குரங்குகளின் அவதாரத்தில் இருக்கும் சிலைகளுக்கு செய்யும் அர்ப்பணிப்புகள் கூட உயிரோடு இருக்கும் குரங்குகளுக்கு போய் சேர்வதில்லை. இனியாவது குரங்குகளுக்காக குரல் கொடுப்போம். அவைகளை காக்க வழிவகை செய்வோம்.
இதையும் படிங்க;
குரங்கு உருவத்தில் மோடியின் தலை: கேலி புகைப்படத்தை வெளியிட்ட நபர் மீது புகார்