2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தாக்கல் செய்த ஆவணங்களில் சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் உள்ள ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என தி.மு.க வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில் ஏ.கே.போஸ் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் சரவணன் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து ஜெயலலிதா கைரேகை முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள அவைத் தலைவர் மதுசூதனன், விண்ணப்பங்களை பெற்றத் தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி சி,பி.ஐ அலுவலகத்தில் பா. சரவணன் புகாரளித்தார். மேலும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திலும் இது குறித்து புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.சரவணன், கைரேகை முறைகேட்டை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, விசாரணையின்போது கைரேகையின் உண்மைத்தன்மையை அறிய பெங்களூர் பரப்பன அக்ராஹார சிறையிலுள்ள ஜெயலலிதாவின் கைரேகையை சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கைரேகையை சமர்பிக்க தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றது, எனவே இதில் குளருபடி இருப்பதை உணர்ந்த நீதிபதி அ.தி.மு.க வின் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கினார் என்றும் கூறினார். ஜெயலலிதாவின் கைரேகை முறைகேட்டில் அ.தி.மு.க வினர் கூட்டுச்சதி செய்துள்ளனர் என கூறிய பா. சரவணன் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், இதையடுத்து தேர்தல் படிவத்தில் அவரின் கையெழுத்துக்கு பதில் கைரேகை வாங்கி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மருத்துவமையில் இருப்பதால் அவரின் கையெழுத்துக்குப் பதில் கைரேகை பெற்றுக் கொள்ளலாம் என்று அவைத் தலைவர் மதுசூதனனுக்கு காலை 7.50 மணிக்கு ஆணை கிடைத்துள்ளது. அப்படியென்றால் அதற்கு முன்பு காலை 6 மணிக்கே எப்படி கைரேகை பெறப்பட்டது என்ற சந்தேகமும் எழுகிறது என்றார்.
எனவே இதில் தொடர்புடைய அவைத் தலைவர் மதுசூதனன், அவர்களுக்கு துணைபோன அப்போதைய தலைமைத் தேர்தல் அலுவலர் ராஜேஷ் லகானி, மாவட்டத் தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துமானால் ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மங்களும் வெளிவர வாய்ப்புள்ளது என்று பா.சரவணன் கூறினார்.