சென்னை: விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலைச் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், "விருகம்பாக்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாகக் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு சட்டவிரோத செயல்களுக்கும் இதுபோன்ற வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான காவல் துறையின் நடவடிக்கைக்குப் பாராட்டு
மேலும், விருகம்பாக்கம் தொகுதிக்குள்பட்ட அருணாச்சலம் சாலை சிவலிங்கபுரம் சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களால் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே காவல் துறை விரைந்துசெயல்பட்டு, வாகன உரிமையாளர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடு அளித்து வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், உத்தரவை மீறி தொடர்ந்து சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை காவல் துறையே பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான சென்னை காவல் துறையின் சிறப்பான நடவடிக்கைளுக்கு மனுவில் பாராட்டு தெரிவித்திருந்த பிரபாகர் ராஜா, தனது தொகுதிக்குள்பட்ட ஒரு சில இடங்களில் கஞ்சா, குட்கா விற்பனை அதிகரித்துவருவதாக வேதனை தெரிவித்தார்.
சட்டவிரோதமாகச் செயல்படுவோரைக் கைதுசெய்க
தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை நடைபெற்றுவரும் குறிப்பிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியை அதிகரித்து அவ்வாறு சட்ட விரோதமாகச் செயல்படும் நபர்களைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சிறுமி சந்தேக மரணம்: உடலுறவுக்குப் பின் காதலனே கொன்றது அம்பலம்