சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 7) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வடகிழக்குப் பருவமழையையொட்டி முன்கூட்டியே ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசு நிர்வாகம் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு (நவ. 6) முதல் பெய்துவரும் கனமழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நான் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறேன். அமைச்சர்களும் இதுபோன்ற நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து திமுக நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றி, மக்களின் இன்னல்களைப் போக்கிடத் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னைக்கு ரெட் அலர்ட்: களத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்