தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், வண்ணாரப்பேட்டை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “வண்ணாரப்பேட்டையில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய தடியடி தாக்குதலால் அங்கு மக்கள் காயமடைந்து இருக்கின்றனர். அதேபோல் இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட பொருளை மீண்டும் விவாதிக்கக் கூடாது என்று சபாநாயகர் தவறான முன்னுதாரணம் கூறுகிறார். ஆனால் இவ்விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதமே நடத்தப்படவில்லை என்பதால் மீண்டும் விவாதிப்பதில் தவறு இல்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் தான் பொதுசொத்தை சேதப்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் கூறுவது ஆளுங்கட்சியின் விஷம பிரசாரம்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காத காரணத்தினாலும் இதுகுறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி மறுத்த காரணத்தினாலும் திமுக அடையாள வெளிநடப்பு செய்துள்ளது” என்றார்.