சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில், 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18.3.2022 அன்றும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கை 19.3.2022 அன்றும் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த நிதியாண்டோடு ஒப்பீடு: அதனையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.4) தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர், கடந்த நிதியாண்டில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த நிதியாண்டின் மானியக் கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: அரசு மாணவர் விடுதிகளில் புதிய மெனு!- நவதானிய தோசை, பட்டாணி குருமா, இடியாப்பம்-தேங்காய்ப்பால்