சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன. 09) நடைபெற்றது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திமுகவிற்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரிக்கும், தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே அரசியல் பனிப்போர் மூண்டுள்ளது.
அவரே எதிர்பார்க்காத அளவுக்கு நிறைய தலைவர்கள், பொறுப்பாளர்கள் அவருக்கு ஆதரவு தந்துள்ளனர். மு.க. அழகிரியின் அரசியல் பிரவேசம் தமிழ்நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். மு.க. அழகிரிக்கு அநேக பேர் ஆதரவு தந்துள்ளனர்.
![மிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10183575_che.jpg)
அவர்கள் எல்லோரும் திமுகவின் தற்போதைய தலைமையின் மீது அதிருப்தி கொண்டிருப்பவர்கள். அழகிரிக்கு வந்த கூட்டத்தால் திமுகவின் வெற்றியை உறுதியாகப் பாதிக்கும். மு.க. ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது. அவரது ஆதரவாளர்கள் அதனை நடக்கவிட மாட்டார்கள்.
அதிமுக அரசு தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் இலவசம், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.
இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க : ’சசிகலா வெளியே வந்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை’ - கே.பி.முனுசாமி