சென்னை : உள்ளாட்சி தேர்தலின் போது, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக பதியப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்கு நேரில் ஆஜராகாத அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என சிறப்பு நீதிமன்றம் முன்னதாக எச்சரித்திருந்தது.
கடந்த 2005ஆம் ஆண்டு உள்ளாட்சி இடைத்தேர்தலின் போது சென்னையில் 131ஆவது வார்டுக்கு உள்பட்ட கே.கே நகர் பள்ளி ஒன்றில் புகுந்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அத்துமீறி உள்நுழைந்து வாக்குச்சீட்டுகளையும், முத்திரைகளையும் பிடுங்கி சென்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்குப்பதிவு
அந்தப் புகாரில், “அதிமுக சார்பில் தேர்தல் ஏஜெண்டாக பணிபுரிந்த சந்தோஷ் தனது காரில் மா. சுப்பிரமணியனை துரத்தித் சென்ற போது தற்போதைய ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ அனபரசன் தூண்டுதலின் பேரில், தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 24 பேர் சேர்ந்து சந்தோஷின் காரை சேதப்படுத்தினார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கே.கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி அலிசியா முன்பு விசாரணைக்கு வந்த போது, குற்றச்சாட்டு பதிவிற்கு அமைச்சர்கள் இருவரும் ஆஜராகவில்லை. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “அடுத்த விசாரணையின் போது குற்றச்சாட்டு பதிவிற்கு அமைச்சர்கள் நேரில் ஆஜராக தவறும் பட்சத்தில், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும்” என எச்சரித்தார்.
இந்நிலையில், அமைச்சர்கள் தா.மோ அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் இன்று (ஆக.19) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வழக்கு சாட்சி விசாரணைக்காக செப்டம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க : நீதிபதி கிருபாகரன் அளித்த முக்கிய தீர்ப்புகள்