சென்னை: தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா பரவல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் உரையாடினார். அந்த உரையில், மோடி பெட்ரோல், டீசல் விலை குறித்து பேசினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், 'நேற்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி கரோனா நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்காக முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக நிலைமையைக் கேட்டறிந்தார். அதில், கடந்த நவம்பரில் மக்கள் மீதான பெட்ரோல் மற்றும் டீசல் விலைச் சுமையைக் குறைக்க மத்திய அரசு கலால் வரியைக் குறைத்து இருந்ததைக் குறிப்பிட்டார்.
சில மாநிலங்கள் ஒரே நேரத்தில் வரிகளை குறைத்திருந்தாலும், சில மாநிலங்கள் இந்த நன்மையை மக்களுக்கு வழங்கவில்லை. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் மத்திய அரசை பொருட்படுத்தவில்லை என்றும், அந்த மாநிலங்களின் பொதுமக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாகின்றனர் என்றும் அவர் கூறினார்.
அவரது கருத்துக்கு மாறாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன்னதாக, ஆக.2021ஆம் ஆண்டு பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) குறைத்தது. அதன் மூலம் தமிழ்நாடு மக்களுக்கு லிட்டருக்கு ரூ.3 நிவாரணம் கிடைத்தது. இந்தக் குறைப்பினால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இருப்பினும், கடந்த அரசாங்கத்தின் கடுமையான நிதி நெருக்கடியை மீறி, மக்கள் மீதான சுமையைக் குறைக்க இது செய்யப்பட்டது.
மறுபுறம், 2014ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசுக்கு வருமானம் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு இணையான அளவு இல்லை. ஏனென்றால், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதே நேரத்தில், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைக்கிறது.
2020-21ஆம் ஆண்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.3,89,622 கோடியாக இருந்தது. இது 2019-20ஆம் ஆண்டில் இருந்த ரூ.2,39,452 கோடியை விட 63 விழுக்காடு அதிகமாகும். மறுபுறம், 2019-20ஆம் ஆண்டில் பெறப்பட்ட ரூ.1,163.13 கோடிக்கு எதிராக, 2020-21ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான யூனியன் கலால் வரியிலிருந்து வரிப் பகிர்வின் பங்காக ரூ.837.75 கோடியை மட்டுமே பெற்றது.
கடந்த நவ.3, 2021 அன்று, மத்திய அரசு பெட்ரோல் மீது லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் அளவுக்கு வரியைக் குறைத்தது. மேலும் ‘ஆட் வலோரம்’ (Ad valorem) வரிகளை தமிழ்நாடு விதிப்பதால், ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கு ஆண்டு வருமானம் 1,050 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படுகிறது.
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, மாநிலங்கள் தங்கள் சொந்த வரிகளை வசூலிப்பதற்கும், வருவாயை உயர்த்துவதற்கும் கணிசமான அதிகாரங்களை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா தொற்றுநோய் காரணமாக மாநிலங்கள் இரட்டைத் தாக்கத்தை எதிர்கொண்டன. அவற்றின் நிதிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு பெரிய அளவிலான கூடுதல் செலவினங்களைச் செய்கிறது.
மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டு முறை வரும் ஜூன் 30, 2022 அன்று முடிவடைகிறது. மேலும் தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்கள் மாநில நிதியில் தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இழப்பீட்டை நீட்டிக்குமாறு ஏற்கெனவே, கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், ஜூன் 30, 2022-க்குப் பிறகு இழப்பீடு தொடருமா.. இல்லையா..? என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்தத் தெளிவும் இல்லை.
திமுக அரசு எப்போதும் கூட்டுறவுக் கூட்டாட்சியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து, பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்திலிருந்தே அதை எழுத்திலும் உணர்விலும் கடைப்பிடித்து வருகிறோம். நமது தற்போதைய முதலமைச்சரின் கீழும் அதைத் தொடர்கிறோம்.
விதிக்கப்படும் செஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றைக் குறைத்து அவற்றை அடிப்படை வரி விகிதங்களுடன் இணைக்க வேண்டும் என்று நாங்கள் பலமுறை மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இதனால், யூனியன் வரிகளின் வருவாயில் மாநிலங்கள் தங்கள் உரிமைப் பங்கைப் பெறுகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பீஸ்ட் பாருங்க... பெட்ரோல் வாங்கீக்கோங்க... ரசிகர்கள் ஏற்பாடு