சென்னை: தொழில் நுட்பக்கல்வி இயக்குநரக வளாகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'பொறியியல் கல்லூரியில் பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கையில் முதல் சுற்றுக் கலந்தாய்வில் 10351 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
2ஆம் கட்டக் கலந்தாய்விற்கு தகுதியான 31,094 மாணவர்களில் 24,458 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்தனர். அவர்களில் 14,153 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர்.
மேலும் மேல்நோக்கிய நகர்வில் வேறு கல்லூரியில் இடம் கிடைக்குமா என 4,131 மாணவர்கள் காத்திருக்கின்றனர். கல்லூரிகளில் 13 ஆயிரத்து 5 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 13ஆம் தேதி பொறியியல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். 1.10லட்சம் மாணவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்த வேண்டியது இருக்கிறது.
கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 2,360 இடத்தில் 2355 பேர் சேர்ந்து விட்டனர். மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்று மாணவர்கள் சென்றுவிட்டால், அந்தக் காலி இடங்களும் நிரப்பப்படும்.
குறிப்பாக கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், எலக்ட்ரானிக் பாடப்பிரிவில் மாணவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். மைனிங், மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளில் தற்போது குறைந்த அளவில் மாணவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். மூன்றாவது சுற்றுக்கலந்தாய்வு முடிவில் இந்தப்படிப்புகளில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள்.
பி.ஆர்க் படிப்பில் சேர்வதற்கு நாட்டா தேர்வில் தகுதிபெற்ற 1610 பேரும், ஜெஇஇ தேர்வில் தகுதிபெற்ற 630 பேரும், நாட்டா, ஜெஇஇ தேர்வில் தகுதிபெற்றவர்கள் 251 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர். கல்லூரிகளில் உள்ள 1609 இடங்களுக்கு 1218 மாணவர்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து பதிவு செய்தனர். அவர்களில் 1039 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
நீட் தேர்வை எதிர்ப்பது போன்று பி.ஆர்க் சேர்க்கைக்கான JEE, NATA, தேர்வை மாநில அரசு எதிர்க்குமா ? என்ற கேள்விக்கு, ’தமிழ்நாட்டிற்கு நேற்று வந்த மத்திய இணை அமைச்சர், கலை அறிவியல் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
மற்றொரு பக்கம்,மத்திய அரசு ஒரே மாதிரியான தேர்வுமுறை, ஒரே மொழி, ஒரே சாப்பாடு என்கிற அடிப்படையில் இந்தியை பிற மாநிலங்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர். தமிழ்நாட்டைப்பொறுத்தவரை மாநிலக் கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடம் மொத்தம் 2050 பணியிடங்கள் உள்ளன. 493 காலியிடங்கள் உள்ளன, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில் பல்வேறுதுறையில் இருந்தும் இளைஞர்கள் தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்றுள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் விரிவுரையாளர்களும் படித்து தேர்வினை எழுதி, தேர்ச்சிப் பெற்றிருக்கலாம்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 6 ஆயிரம் இடங்களில் 4ஆயிரம் இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலும் நடைபெறும். கல்லூரிகளில் விரிவுரையாளராகப் பணியாற்றி காலத்திற்கு ஏற்ப ஆண்டிற்கு 2 மதிப்பெண்கள் என 7 ஆண்டு 6 மாத காலம் பணியாற்றி இருந்தால் நேர்முகத் தேர்வில் 30 மதிப்பெண்களில் 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்படும் தேர்வினை அனைவரும் படித்து எழுத வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் இன்று முதல் சுற்றுக்கலந்தாய்வுக்கான விண்ணப்பதிவு தொடங்கியது