சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவை வளாகத்தில் நடைபெற்ற நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துப் பேசினார்.
அப்போது, "உச்சநீதிமன்றம் 7.5.2005 அன்று முல்லை பெரியாறு அணைக்கு சூப்பர்வைசர் கமிட்டி அமைக்க ஆணையிட்டது. அன்று முதல் இந்த கமிட்டி நடைமுறையில் உள்ளது.
அணை பாதுகாப்பாக இருக்கின்றதா என்பதனை ஆய்வு செய்து, அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதே இந்த கமிட்டியின் வேலை. இந்தக் கமிட்டி தெரிவித்த சில வேலைகளை செய்வதற்கு கேரள அரசு தடையாக உள்ளது.
இந்தக் கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது சரியா என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் மத்திய நீர் ஆணையம் (central water commission) ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநர்களை போடலாம் என்றும், இந்த குழு அளிக்கும் தகவல்களுக்கு அந்தந்த மாநில தலைமை செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'சொத்து வரியை உயர்த்தி, மக்கள் காதில் பூ சுற்றிவிட்டனர்'