விழுப்புரம்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன் வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பேரவையில் வேலூரிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து புதிய பல்கலைக்கழகம் விழுப்புரத்தில் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் கே. பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். பின்தங்கிய மாவட்டங்களாக விழுப்புரமும், கள்ளக்குறிச்சியும் உள்ளதைக் கருத்தில்கொண்டும், இவ்விரு மாவட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குச் சட்டப்பேரவையில் திமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அடிப்படை வசதிகள் இல்லை என்றும், இதை இரண்டாகப் பிரிக்காமல் புதிதாக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இடம் தேர்வு செய்யும் பணிகளும், பல்கலைக்கழகத்திற்கு யார் பெயர் சூட்டலாம் என்ற ஆலோசனைகளும் நடைபெற்றுவந்தது.
இச்சூழலில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன் வடிவு இன்று பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். மேலும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை, உயர்கல்வித் துறையிலிருந்து சுகாதாரத் துறைக்கு மாற்றி அமைப்பதற்கான சட்ட மசோதாவையும் அவர் பேரவையில் தாக்கல் செய்தார்.
ராஜா முத்தையா மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, ஜனவரி 28 ஆம் தேதி உயர் கல்வித்துறை வசம் இருந்த கல்லூரியை மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் கட்டணக் குறைப்புத் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் அரசாணையில் இல்லாமல் இருந்ததால் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர். இதையடுத்து, கட்டணக் குறைப்புக்கான அரசாணையைச் சுகாதாரத் துறை வெளியிட்டது. தொடர்ந்து மாணவர்களும் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.