ஊரடங்கு அமலில் இருப்பதால், தமிழ்நாட்டின் பல இடங்களில் தங்கி பணிபுரிந்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் தங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேனி பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி தனியார் கட்டட கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு நாகல்கேனி திருநீர்மலை சாலையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்கர் நகர் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், ஐந்து நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சங்கர் நகர் காவல்துறையினர், வடமாநிலத் தொழிலாளர்களிடம் முறையாக கணக்கெடுப்பு நடத்திய பிறகு படிப்படியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதேபோன்று, ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தை இருநூறுக்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
ஆவடியில் உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா என பல வெளி மாநிலத் தொழிலாளர்கள், இந்து கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சரியான உணவு கூட தராமல் இங்கு தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 17ஆம் தேதி அனுப்புவதாகக் கூறி, இன்று வரை சொந்த ஊருக்கு அனுப்பாமல் அலைகழிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். பிகார் மாநிலத்திற்கு ரயில் போக்குவரத்து இருந்தும், ரயில் இல்லை என அலுவலர்கள் பொய் கூறுவதாகவும் அத்தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது' - அமைச்சர் செல்லூர் ராஜூ