சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.
இதன் காரணமாக அங்கு பணியாற்றிய சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், கருப்பு எழுத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது.
அதில், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சார் பதிவாளர் கோபால கிருஷ்ணன், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், "ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான சார் பதிவாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுவரை பதிவுத் துறையில் ஊழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தமிழ்நாடு அரசு தாக்கல்செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை ஊழல் துறையாக இருந்தது - அமைச்சர் மூர்த்தி