சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும், இந்தக் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நீர்நிலையை பழைய நிலைக்கு கொண்டு வரக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள் இரண்டு பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது. இது குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், காவல்நிலையம் கட்டப்பட்ட இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர தடை விதித்த நீதிபதிகள், தாமரைக்கேணி ஏரியை ஒட்டிய பகுதிகளில் மேற்கொண்டு எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்ததுபோது, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களின் அடிப்படையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர் நிலை என்றும், 1987 ஆம் ஆண்டு வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடம் மேய்க்கால் புறம்போக்கு என்றும் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்
இந்த நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட இடம் 1906 ஆண்டிலேயே கிராம நத்தமாக வகைபடுத்தப்பட்டுவிட்டதாகவும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்றும் கோரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.