சென்னை: மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவப்பொருட்கள், எழுது பொருட்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாகப் போலிக்கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாக வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை பாதுகாப்பு மைய இயக்குநருமான பி.புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடந்த இந்த ஊழலில் ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.
சிறைக்குள்ளும் ஊழல்
பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்ததாகவும், சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலிக்கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. குறைந்தளவு பொருட்கள் உற்பத்தி செய்து, அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பித்துள்ளதாகவும், இந்த முறைகேட்டில் அப்போதைய சிறைக் கண்காணிப்பாளர், டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தும்படி குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.
அதேசமயம், இந்தப் புகார் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த உத்தரவு தடையாக இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளிக்கு ஒரு விதி தனியார் பள்ளிக்கு ஒரு விதியா? - உயர்நீதிமன்றம் கேள்வி