சென்னை: கடந்த 2012ஆம் ஆண்டு 48 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடி செய்ததாக ரமேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர், மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன்பின்பு சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரையை, சுந்தரமூர்த்தி அணுகி அசல் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க கேட்டார்.
அதற்கு செல்லத்துரை 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையில், சுந்தரமூர்த்தி புகார் செய்ததன் அடிப்படையில், செல்லத்துரையை கையும், களவுமாகப் பிடிபட்டார்.
இதுதொடர்பான வழக்கை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் செல்லத்துரை மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல்... 24ஆம் தேதி வரை சட்டபேரவைக் கூட்டம் - சபாநாயகர் அறிவிப்பு