2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், வேட்புமனுவில் சொத்து விவரங்கள் முறையாக காட்டப்பட்டுள்ளது.
எந்த தகவலையும் மறைக்கப்படவில்லை. குறிப்பாக வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்கிய விலை, தற்போதைய சந்தை விலை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து மிலானி தரப்பில், சொத்து விவரங்களை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அவரது மனைவியின் பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய விவரங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கப்படவில்லை. அவரை தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ஓ. பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்கும் உத்தரவை திரும்பப் பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்