அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் தன்னையும் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த தீபா என்ற மாணவி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், “ தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தகுதிபெற்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியூஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. இதனையடுத்து, நடப்பு 2020-2021 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டு வருகிறது. 6ஆம் வகுப்பை தனியார் பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் தனக்கு இடம் வழங்கப்படவில்லை. 6ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்தவந்த நான், கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் குடும்ப வறுமையின் காரணமாக 7ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தேன். அரசின் இதுபோன்ற வகைப்பாடுகளால் என்னைப் போன்ற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.தற்போது நிவர் புயல் காரணமாக மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே 2020-2021 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து, என்னைப் போன்ற மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், “இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்து, உயர் கல்வியை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் அரசுப்பள்ளி மாணவர்களாகவே கருதப்படுவார்கள் என அரசு கூறியுள்ளது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” என்றார்.
அத்துடன், மனு தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார். வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க : கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா: மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்