சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ கர்நாடக மாநிலத்தில் கல்லூரி ஒன்றின் ஆண்டுவிழாவில் ஆளுங்கட்சியைக் கேலி செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தியதற்கு, கல்லூரி நிர்வாகம் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும்போது நாடு ஃபாசிசத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிகிறது. இந்தப் போக்கு நீடித்தால் எதிர்காலத்தில் விபரீதங்களை ஏற்படுத்தும் “ என்றார்.
குரூப்-4 தேர்வு முறைகேடு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்ட நம்பகத்தன்மையானது என நேற்று வரை எல்லோரும் நம்பியிருந்த, அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் இவ்வளவு பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால் குரூப் 1 தேர்விலும் முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே முறைகேடு நடந்துள்ள தேர்வுகளை ரத்து செய்துவிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் அவர்களை உளவியல் ரீதியாக அது பாதிக்கும் என்றும், எனவே கல்வி அமைச்சர் இத்திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: தொடரும் சிபிசிஐடி விசாரணை