சென்னை : சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகை அம்மா அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “கரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கில் உயர்கிறது. உலகளவில் தொற்று அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னை ஐஐடியில் கரோனா பாதிப்பு: இந்நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பான சூழல் அவசியம், நேற்று ஐஐடியில் 3 பேருக்கு தொற்று என்றவுடன் உடனே அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, ஐஐடியில் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் இருந்து சென்னை வந்த தொழிலாளர்களுக்கு கரோனா ஏற்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் குழு குழுவாக வருகின்றனர். ஆகவே, தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாதோர் எண்ணிக்கை: அதன் மூலம் தொழிலாளர்களுக்கு இலவச ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசியையும் தமிழக அரசு செலுத்தும் எனக் கூறினார். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இறங்கிவந்தது. ஆகையால் கரோனா பாதிப்பு முடிந்துவிட்டது என நினைத்தோம்.
முன்னர் 21 நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிப்பு 30-ஐ தாண்டிவருகிறது. தமிழ்நாட்டில் 92.42 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியும், 77.69 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இரண்டாம் தவணையை 1 கோடியே 46 லட்சம் பேர் செலுத்தாமல் உள்ளனர். 54 லட்சம் பேர் முதல் தவணை செலுத்தாமல் உள்ளனர்.
மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்: இலவு காத்த கிளியாக தடுப்பூசி செலுத்துவோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் மெகா தடுப்பூசி முகாமை நிறுத்தினோம். ஆனால் மே மாதம் 8ஆம் தேதி சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் நடத்த உள்ளோம்.
முதல் தவணை செலுத்திக் கொள்ளாத 54 லட்சம் பேர், இரண்டாம் தவணை செலுத்தாமல் உள்ள 1 கோடியே 46 லட்சம் பேர் என ஏறக்குறைய 2 கோடி பேரை மனதில் வைத்து இந்த தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடு சென்று தடுப்பூசி: முதல் தவணை செலுத்தாமல் உள்ளோரை தனித்தனியே வீடு தேடி சென்று சந்தித்து வரும் மே மாதம் 8ஆம் தேதி தடுப்பூசி செலுத்த வேண்டுகோள் விடுப்போம்" என்று கூறினார். அன்றைய தினம் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு நிதியுதவி