சென்னை: அதிகரிக்கும் கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பொது இடங்களில் மக்கள் மாஸ்க்கை போடுவதை மீண்டும் பின்பற்றுகின்றனர். சிலர் மாஸ்க் இல்லாமல், விதிமுறைகளை ப்ரேக் செய்து மாஸ்க் இல்லாமல் சுற்றி வருகின்றனர். மாஸ்க் இல்லையென்றால் ரூ.500 அபராதம் என அரசு சொன்ன உடன் சமூக வலைதளத்தில் 4ஆம் அலை, ஊரடங்கு என மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர், நெட்டிசன்கள்.
சட்டப்பேரவையில் எதிரொலித்த மாஸ்க் விவகாரம்: தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாஸ்க் விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்துள்ளது.
மாஸ்க் அணிய மறந்த எம்எல்ஏக்கள்: சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25) நடைபெற்ற விவாதத்திற்கு இடையே பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், (முகக்கவசம் அணியாமல் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களை சுட்டிக்காட்டி பேசும் விதமாக) முகக்கவசம் கட்டாயம் என்பது பொதுமக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? ஏன் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பொருந்தாதா ? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 'பேசும் போது சத்தம் குறைவாக வருகிறது. அதனால், சிலர் மாஸ்க் போடுவதில்லை; மற்றபடி சட்டத்தை மதிக்க கூடாது என்று இல்லை' என சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
பின் இதற்கு மேலும், பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'முகக் கவசம், தனி மனித இடைவெளி ஆகியவை கட்டாயம் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை கரோனா 3ஆம் அலையின்போதே, முதலமைச்சர் அறிவித்தார். அந்த விதிமுறைகள் தற்போது வரை விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றும், 3ஆம் அலை சுமுகமாக முடிந்து, தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், முகக் கவசம் அணிந்து கொள்வது அனைவரின் நலனுக்கும் நல்லது' என்றும் கூறினார்.
இதையும் படிங்க: முகக் கவசம் - எவ்வாறு கையாள வேண்டும் என விளக்குகிறார் மருத்துவர் வெங்கடேஷ்