சென்னை: தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலப் பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் கொடுமைகள் குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்திய அரசு, இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையில் நடந்த போரில் அநீதி இழைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட எந்தவொரு விசாரணைக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை. ஏற்கனவே ஐநா மன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்தும் இலங்கை அரசு விலகிக்கொண்டது.
இந்நிலையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐநா மனித உரிமை மன்றத்தில் ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு நிலைப்பாடு எடுக்குமானால் அது அநீதிக்குத் துணைபோவதாகவே அமையும். இதுவரை இந்தியா எடுத்துவந்த நிலைப்பாட்டுக்கும் எதிராக இருக்கும்.
எனவே, போர்க்குற்றவாளிகளை இன்றுவரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். அதுவே குறைந்தபட்ச நியாயமாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74%: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்