உடலுறுதி கொண்ட ஆண்களை விட மனவலிமை படைத்த பெண்களுக்கே பலம் என்பது அவர்களுக்கே உரித்தான சிறப்பு. பெண்களே பெண்களுக்காகப் போராடிப்பெற்ற சுதந்திரம் இது. பெண்களுக்கான சுதந்திரம் , சமத்துவம், பிரதிநிதித்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என்றும் நமது வாழ்க்கையில் ஒரு முழு உருவாக்கத்தை தருபவர்கள் பெண்கள்.எனவே, பெண்களுக்கான உரிமையை பெற்ற வரலாற்றை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டியது அவசியம்.
1789-இல் பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட புரட்சியின்போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தி ஒன்றாக சேர்ந்து தங்களுக்கான உரிமையை கேட்டுப் போராடினர். இதில், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கான வாக்குரிமை, நிரந்தர ஊதியம் மற்றும் பெண்கள் அடிமையாக நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடினர்.
வெறும் எதிர்ப்பாக கிளம்பிய இந்த போராட்டம் நாளடைவில் பெண்கள் குழுக்களாக ஒன்று திரண்டு கிளர்ச்சியை ஏற்படுத்தினர். பெண்கள்தானே என்று மெத்தனப்போக்கு காட்டிய பிரான்ஸ் மன்னன் 14ஆம் லூயிக்கு பேரிடியாக விழுந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் பெண்கள் அனைவரும் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தி தங்களது உரிமைகளை நிலை நாட்டினர். இந்த செய்தி ஐரோப்பிய நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது.
வாய்ப்புகளை வழங்குவோம்
இதனைத்தொடர்ந்து அந்தந்த நாடுகளில் பெண்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்டு போராட ஆரம்பித்தனர். பின்னாளில் உலக நாடுகளின் சார்பில் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர்தின நாளாக அறிவிக்கப்பட்டது.
மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து 2022 உடன் 111-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளன. மகளிருக்கான உரிமைகள் கிடைத்துவிட்டது என்று பெருமை பேசினாலும் இந்த நவீன காலகட்டத்திலும் பெண் அடிமைத்தனம் நீடிக்கத்தான் செய்கிறது. தங்களது லட்சிய கனவுகளை நிறைவேற்ற முடியாமல் குடும்பம் என்ற போர்வைக்குள் சிக்கி தவிக்கும் பெண்களும் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
ஆண்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதே உலகம் அறிந்த உண்மை. பாதுகாவலனாக இருக்க வேண்டிய ஆண்கள் பெண்களை ஒரு காமப்பொருளாக காட்சிப்படுத்தும் கொடுமை நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணாக வாழ்வதே கடினம்தான்.
அந்த தடைகளை உடைத்தெறிந்து பாலியல் துன்புறுத்தலுக்கும், உச்சக்கட்ட அவமானங்களை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளே அடக்கிக்கொண்டு மன உறுதியுடன் போராடி வருகின்றனர். பெண்கள் மீது அனுதாபப்பட வேண்டாம் ஏணியாக இருப்போம். அவர்கள் வாழ்க்கையை அவர்களே முடிவுசெய்ய வாய்ப்புகளை வழங்குவோம். மகளிர் தின வாழ்த்துக்கள்...!
இதையும் படிங்க: அப்பாவால் உயிருக்கு ஆபத்து - காதல் திருமணம் செய்த அமைச்சரின் மகள்!