குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்த இந்த முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருப்படங்கள் தீயிட்டுக் கொளுத்தி முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையும் பெருமளவில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “ குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அதிமுகவும், பாமகவும் வரலாற்று துரோகத்தை செய்துள்ளன. தான் திராவிடக்கட்சி என்றோ, எம் ஜி ஆர், ஜெயலலிதா வழி நடக்கும் கட்சி என்றோ சொல்லும் தார்மீக உரிமையை அதிமுக இழந்துள்ளது. மக்கள் இவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.
இந்தச் சட்டம் முஸ்லிம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. சிறுபான்மையின மக்கள், இலங்கைத் தமிழர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துவிட்டது.
மேற்கு வங்கம், புதுச்சேரி போல குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டோம் என தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். தேசியக் குடிமக்கள் பதிவேட்டை எடுக்க விடக் கூடாது. இது கோரிக்கை தான், இது நடக்க வில்லை என்றால் போராட்டம் இன்னும் வலுப்பெறும் “ எனப் பேசினார்.
இதையும் படிங்க: திமுகவுடன் கை கோர்க்கும் கமல் ஹாசன்!