கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பாஜக-வின் தமிழ்நாடு தலைமை இடமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். தேசியக் கொடியை அவமதிக்கும் நோக்கில், பா.ஜ.க கட்சி வர்ணம் பூசப்பட்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சிக் கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன் மற்றும் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரைச் சேர்ந்த குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி குகேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், பாஜக கட்சி கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றியது தேசியக் கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றம் என்பதால் எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.