சென்னை: கோயம்பேடு, தரமணி என இரண்டு இடங்களில் அரசு அலுவலர்களிடம் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் என கூறி பண மோசடி செய்ய முயன்ற சின்னையன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜன் பாபு. கடந்த 22ஆம் தேதி ராஜன் பாபு, அலுவலகத்தில் இருந்தபோது லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் எனக் கூறி ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார்.
போலி அலுவலர்: அதிக லஞ்சம் வாங்குவதாக உங்கள் மீது புகார்கள் வருவதால் உடனடியாக உங்கள் இல்லத்தில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என அந்த நபர் ராஜன் பாபுவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று ராஜன் பாபு சோதனை செய்துள்ளார்.
அப்போது பீரோவில் இருந்த 6,000 ரூபாய் மட்டும் எடுத்துக் கொண்டு உங்கள் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என தங்களது டீமுடன் வருவதாக கூறி அந்த நபர் காரில் இருந்து இறங்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த ராஜன் பாபு கோயம்பேடு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அடுத்த நாளே இதே போல மற்றொரு சம்பவம் தரமணியில் நடந்தது.
தொடர்ந்து மோசடி: தரமணி சி.எஸ்.ஐ.ஆர் சாலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்த அசோகன்(56), என்பரிடம் கடந்த 23ஆம் தேதி அலுவலகத்தில் இருந்த போது நபர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என அறிமுகப்படுத்தி கொண்டு, தங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் 10க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், 10லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் சந்திக்க தேவையில்லை என மிரட்டியுள்ளார்.
பயந்து போன அசோகன் அவசரமாக அவரது காரில் அந்த நபரை அழைத்துக்கொண்டு வீட்டின் பீரோவில் பணம் எடுக்க சென்றார். அப்போது பீரோவில் பணமில்லாததால் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வங்கி லாக்கரின் சாவியை எடுத்துக்கொண்டு அசோகன், அந்த நபருடன் வங்கிக்கு சென்றனர்.
அந்த சமயத்தில் அசோகனின் மனைவிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர் எனக்கூறிய நபர் மீது சந்தேகம் வந்ததை அடுத்து, அவர் வங்கி மேனேஜரிடம் லாக்கரை திறக்க அனுமதிக்கவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த நபர் நாளை பணத்தை பெற்றுக்கொள்கிறேன் எனக்கூறி நுங்கம்பாக்கத்தில் இறங்கி தப்பியோடி உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அசோகன் தரமணி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அடுத்தடுத்து இரண்டு நாட்களில் அரசு அலுவலர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடி சம்பவத்தால், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இந்த மோசடி தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மாநகர காவல்துறைக்கு வாய்மொழியாக புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
பிடிக்க உதவிய சிசிடிவி: இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளில் பதிவான மோசடி நபரின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உஷார் படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து மாடம்பாக்கம் கேம்ப் ரோடு பகுதியை சேர்ந்த சின்னையன் (52) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சின்னையனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்த சின்னையன் தனது தந்தை காலத்தில் இருந்தே வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கரோனா காலத்தில் கடன் பெற்றவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதால்,சுமார் 20 லட்சம் வரை நஷ்டம் அடைந்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கைக்காக முடிவு: வட்டி தொழிலில் நஷ்டம் அடைந்ததால், அரசு அலுவலர்களின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட செய்தியை சின்னையன் நாளிதழில் படித்து, அதன் பின்னர் சின்னையன் பார்ப்பதற்கு காவலர் போல மீசை மற்றும் நடைபாவனைகளை மாற்றி, மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார்.
முதலாவதாக வண்டலூரில் நடைபெறும் சிஎம்டிஏ பணி குறித்தும், அதன் திட்டத்தொகை குறித்தும் சின்னையன் அறிந்து கொண்டு, கடந்த 22 ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ செயற்பொறியாளர் ராஜன் பாபுவிடம் சென்று மிரட்டி 6 ஆயிரம் ரூபாய் கைவரிசை காட்டியுள்ளார்.
அதன் பின்பு செய்தித்தாளில் பொதுப்பணித்துறை சம்பந்தப்பட்ட விளம்பரத்தை பார்த்து கடந்த 23ஆம் தேதி நீர்வளத்துறை அலுவலர் அசோகனிடம் கைவரிசை காட்ட சின்னையன் முயன்றதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திட இந்த வழியை தேர்ந்தெடுத்ததாக சின்னையன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். வேறு எங்கெல்லாம் இதே போல மோசடியில் ஈடுபட்டுள்ளார், உதவியாக யாரும் உள்ளார்களா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் ரூ.1.44 கோடி நிலம் அபகரிப்பு - 4 பேர் கைது