சென்னை: இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ள, ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற, வேலூா் பயணியை சென்னை விமானநிலையத்தில், குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து,விமானநிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
சென்னையில் இருந்து ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும், ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பட இருந்தது. விமானத்தில் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனா்.
அப்போது வேலூரைச் சேர்ந்த சந்திரன் (50) என்ற பயணி, இந்த விமானத்தில் ஓமன் நாட்டுக்கு செல்வதற்காக வந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை ஆய்வு செய்தனா்.
அப்போது அவர், ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில், இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்த ஏமன் நாட்டுக்கு சென்று, 6 மாதங்கள் அங்கு சட்ட விரோதமாக தங்கி இருந்தது தெரிய வந்தது. இந்திய அரசு ஏமன், லிபியா ஆகிய நாடுகளுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்கள் யாரும் சொல்லக்கூடாது என்ற தடையை, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி உள்ளது. அந்த தடையை மீறி செல்பவர்கள், மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், இவற்றையெல்லாம் மீறி சந்திரன் ஏமன் நாட்டிற்கு சென்றிருந்ததால், குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பயணத்தை ரத்து செய்தனர். அதோடு அவரிடம் விசாரணை நடத்தினர்.மேலும் கியூ பிராஞ்ச் போலீஸ், மத்திய உளவு பிரிவினரும் தீவிர விசாரணை நடத்தினர். அப்பொழுது சந்திரன் தான் தெரியாமல் போய்விட்டேன் என்று கூறினார். ஆனால், அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவரை தொடர்ந்து விசாரித்த போது, தற்போதும் ஓமன் நாட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு செல்ல இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், சந்திரனை வெளியில் விடாமல் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார், சந்திரனை கைது செய்து, தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றது, மற்றும் பாஸ்போா்ட் விதிகளின் படியும் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெட்டியில் ரூ.26.28 லட்ச மதிப்புள்ளபொருட்கள்... உள்ளாடையில் 336 கிராம் தங்கம் - சிக்கிய சிவகங்கை பயணி!