திருநெல்வேலியை சேர்ந்த சுதா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என்னுடைய கணவர் ரமேஷ்(38) மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்தார். கடந்தாண்டு 60 நாள்கள் விடுப்பில் வீட்டிற்கு வந்துவிட்டு, மீண்டும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ரயில் மூலமாக மேற்கு வங்கம் புறப்பட்டார்.
செப்டம்பர் 30ஆம் தேதி சீல்டா ரயில் நிலையத்தை அடைந்ததாக என்னிடம் தெரிவித்தார். இதற்குபின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டால், என் கணவர் பணியில் சேரவில்லை என்கின்றனர். இதனால், திருநெல்வேலி பழுவூர் காவல் நிலைத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது கணவர் கண்டுபிடித்து தர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரருக்கு நாம் பாதுகாப்பு வழங்க வேண்டும். மாநிலங்களில் காணாமல் போன பலரை காவல்துறை கண்டுபிடித்து கொடுக்கிறது. ஆனால் எல்லை பாதுகாப்பு படை வீரரை கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்" என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து,
இந்த வழக்கு குறித்து மேற்கு வங்காள மாநில காவல்துறையிடம் தகவல் பெற்று மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபா வழக்கு: இப்போதைக்கு குற்றப்பத்திரிக்கை வேண்டாம் - உயர் நீதிமன்றம்