புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த கலைலிங்கம் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் கலைலிங்கம் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, கலைலிங்கத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நீதிபதி என்.கிருபாகரன் வழங்கிய தீர்ப்பில், "இனம், பிரேதசம், மதம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு எதிராக இளைஞர்களை, தேசத்துரோகிகள் போராடச் செய்கின்றனர். இதற்காக வன்முறை, கலவரம் உள்ளிட்ட செயல்களில் இளைஞர்களை ஈடுபடுத்துகின்றனர்.
பயங்கரவாதம், வன்முறை, கலவரம் ஆகியவற்றில் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரு காலத்தில் தனி நாடு கேட்டு காலீஸ்தான் தீவிரவாத அமைப்பு, நாகலாந்து விடுதலைப்படை, உல்பா, மணிப்பூர் மக்கள் விடுதலைப்படை என்று பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டன. இந்த அமைப்புகளை எல்லாம் படிப்படியாக மத்திய அரசு ஒடுக்கிவிட்டது.
இவர்கள் கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு தேசியக் கொடியை பறக்கவிடவும், நம் நாட்டு தேசியக் கொடியை எரிப்பதையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.
எதிரிநாட்டை விட உள்நாட்டில் இருக்கும் இவர்களால் நம் தேசத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது என்பது தெரிகிறது. எனவே நாடும், நாட்டு மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது போன்ற தீவிரவாத அமைப்புகளில் ஒன்று தான் தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. அதனால் பிணை மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.
இது போன்ற கொள்கைகளைக் கொண்ட அமைப்புகள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் என்ற முகக்கவசங்களுடன் சுதந்திரமாக செயல்படுகின்றன. இவை தமிழ்நாட்டில் நிம்மதி இல்லாத நிலையை உருவாக்குகின்றன. அதேநேரம், நல்ல எண்ணத்துடன், மக்கள் சேவை செய்யும் தன்னார்வ அமைப்புகளும் நம் நாட்டில் உள்ளன என்பதை மறுக்க முடியாது.
அதேபோல தமிழ்நாட்டில், தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற ஆயுதங்களுடன் பல அமைப்புகள் உள்ளன. இந்த ஆயுதங்களை கையில் தூக்க பல அரசியல் கட்சிகளும் காத்திருக்கின்றன.
இது போன்ற சூழ்நிலைகளில், ஒரு குறிப்பிட்ட மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவும், பிற மொழிகளிடம் பாகுபாடுகளை உருவாக்குவது போலவும் ஒரு தோற்றத்தை அரசு ஏற்படுத்தினால், அது கண்டிப்பாக எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகிவிடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் நீதிபதி கிருபாகரனுடன் தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதி ஆர்.ஹேமலதா, "ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை ஏற்றுக் கொள்கிறேன், இருப்பினும் தமிழ் மொழி, தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை குறித்த அவரது கருத்துகளை நான் ஏற்கவில்லை. மொழிகளை கற்றுக் கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்" என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்