சென்னை: சென்னை உயர் நீதிமன்ற 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இன்று (ஜனவரி 4) ஆளுநர் மாளிகையில் வைத்து பதவியேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி. சாஹியின் பதவிக்காலம் (டிச. 31, 2020) முடிவடைந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான கொலிஜியம் குழு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்தது.
உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவின் இந்தப் பரிந்துரை, மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார். இவருக்கு சென்னை ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. கே. பழனிசாமி பங்கேற்றார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு: கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி!