இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம், நல்லுறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கத் தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அக்டோபர் 11ஆம் தேதி சந்தித்துப் பேசுகின்றனர். தமிழ்நாட்டுக்கு வருகைதரும் இருநாட்டுத் தலைவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத் துறை, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சார்பில் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை...!
அதில், 'பிரதமர் மோடி, சீன அதிபரை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி ஆஜராகி, பேனர் வைக்க அனுமதி வழங்கக் கூடாது வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.
'நீங்கள் பேனர் வைத்துதான் உங்களை வெளிப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை' - நடிகர் சூர்யா
திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், நீதிமன்றம் பிறப்பித்த பேனர் உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என திமுக சார்பாகப் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக சார்பில் இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. டிஜிட்டல் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கினால் அதில் அரசியல் கட்சியினர் சார்பாகப் பேனர்கள் வைக்க அனுமதிக்கக் கூடாது என வாதாடினார்.
ஈரோட்டில் அவசர அவசரமாக 50 பேனர்கள் அகற்றம்!
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எந்த இடங்களில் பேனர் வைக்கப்பட உள்ளது என்ற புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தார். மேலும், சாலை வழியாக இந்திய பிரதமர், சீன அதிபர் மாமல்லபுரம் செல்கின்றனர். இரண்டு நாட்கள் அங்கே தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேனர் வைக்க அனுமதி வழங்கினால் நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் பேனர் வைக்க புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம்: அதிமுக பிரமுகருக்கு சிறை!
இதுவரை தமிழ்நாடு அரசு விதிகளை உருவாக்கவில்லை. முதலில் விதிகளை உருவாக்குங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், பேனர் வைக்கத் தமிழ்நாடு அரசு சார்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கத் தேவையில்லை. விதிமுறைகளைப் பின்பற்றிச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அனுமதி வாங்கி பேனர் வைத்துக்கொள்ளலாம் என அனுமதி வழங்கிய நீதிபதிகள் வழக்கை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பேனர் வழக்கில் கைது செய்யப்பட்டோரை சிறையில் அடைக்க முடியாது: நீதிமன்றம்