நடைபெற்று முடிந்த 27 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 315 வாக்குச் சாவடிகளில் எண்ணப்படும் பணிகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இன்றும் தொடர்கிறது. இதுவரை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 515 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 210 பதவியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில் அதிமுக 74, திமுக 110, பாஜக 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய கம்யூனிஸ்ட் 7, தேமுதிக 2 என கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள் அதிமுக ஆயிரத்து 226, திமுக ஆயிரத்து 630, பாஜக 48, இந்திய கம்யூனிஸ்ட் 57, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 20, தேமுதிக 85, காங்கிரஸ் 89, மற்றவை 594 என மொத்தம் ஐந்தாயிரத்து 90 இடங்களில் மூன்றாயிரத்து 849 பதவியிடங்களுக்கு வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்பதாயிரத்து 624 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களில் ஏழாயிரத்து 517 மட்டுமே வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களில் 43 ஆயிரத்து 448 பதவியிடங்களுக்கு மட்டுமே வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் இல்லாமல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் இன்று மாலைக்குள் மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.