சென்னை: தமிழ்நாட்டில் 2,381 பள்ளிகளில் 52 ஆயிரத்து 933 குழந்தைகளை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்ப்பதற்கு 3 ஆண்டிற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனவும், மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகளைப் பொறுத்து திட்டத்தை மேலும் விரிவுப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என சத்துணவு மற்றும் சமூகநலத்துறை செயலாளர் மணிவாசகன் 2018 டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 2019-20 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. மேலும் அரசாணை வெளியிடும் போது, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2019-20 ஆம் கல்வியாண்டிற்கு 7 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதம் கரோனா தொற்றுப்பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் கரோனா முதல், 2, 3 ஆவது அலையின் காராணமாக மழலையர் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருந்து வந்தன. 2022 பிப்ரவரி மாதம் மீண்டும் தொடங்கப்பட்டன. சமூக நலத்துறையின் அரசாணையின் படி 3 ஆண்டிற்கு மட்டுமே சோதனை அடிப்படையில் மாணவர்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதில் ஒரு ஆண்டில் மட்டும் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான செலவினத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், அங்கன்வாடி மையங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது.
சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2,381 அங்கன்வாடி மையங்களை தொடர்ந்து செயல்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மையங்களில் எல்கேஜி. யுகேஜி வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படாது என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது!