சென்னை: வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மே 26ஆம் தேதி 5 சிங்கங்கள் தொடர் இருமலால் பாதிப்படைந்தன. இதையடுத்து வனவிலங்கு மருத்துவர்கள் உடனடியாக சென்று உரிய முறைப்படி ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
மேலும், பூங்கா நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, மேற்படி சிகிச்கைக்காக மருத்துவ நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அனுப்பி வைத்தது.
இச்சூழலில், 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகத்திற்கும், மூக்கு மற்றும் மலவாயிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபால், மத்திய பிரதேசத்தில் உள்ள ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையில் ஜூன் 3ஆம் தேதி மாலை, 9 வயதான நீலா எனும் பெண் சிங்கம் உயிரிழந்தது. இப்பெண் சிங்கத்திற்கு முதல் நாளிலிருந்தே சில திரவங்கள் மூக்கிலிருந்து சுரந்து கொண்டிருந்ததாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதியனாது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விலங்கு காப்பாளர்களுக்கும், கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று சிங்கங்களின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சிங்கங்கள் அனைத்தும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.