சென்னை: சட்டப்பேரவையில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றை பின்வருமாறு காண்போம்...
- இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு புதியதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.6.80 கோடி ரூபாய் செலவில் தமிழில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
- அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உபயோகமற்ற மற்றும் சீர் செய்ய இயலாத நிலையில் உள்ள இயந்திரங்கள் கருவிகள் மற்றும் தளவாடங்கள் மாற்றப்பட்டு, ரூ.20 கோடி செலவில் புதிய இயந்திரங்கள் கருவிகள் மற்றும் தளவாடங்கள் நிறுவப்படும்.
- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் வழங்கப்பட்டு வரும் 1 லட்சம் ரூபாயினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கான மொத்தம் செலவினம் ரூ.3.04 கோடி.
- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்படும் ரூ.2 கோடி நிதி, ரூ.4.88 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்க்ஷா வாகனம் வாங்கும் பொருட்டு, தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இதற்கான மொத்த செலவினம் ரூ.5 கோடி.
- சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் எடைகள் மற்றும் அளவைகளில் மின்னும் முத்திரையிடுதல் பணியை மேற்கொள்ள சட்டமுறை எடையளவு பிரிவு, ரூ.59.37 லட்சம் செலவில் கணினி மயமாக்கப்படும்.
- தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விபத்து மரணங்கள் உதவித்தொகை 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவித் தொகை, 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஆண்டிற்கு சுமார் 600 பதிவு பெற்ற பெண் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
- கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகையான ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு ரூ.1,000 மற்றும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு ரூ.1,200 ஆகியவை, ஆண்டிற்கு ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண நலத்திட்ட உதவித் தொகை ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 3,000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
- அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி ரூ.4.66 கோடி செலவில் உருவாக்கப்படும்.
- அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் QR code மற்றும் chip பொருந்திய திறன் அட்டை ( ஸ்மார்ட் கார்டு ) ரூ.27.38 செலவில் வழங்கப்படும்.
- தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் நலத்திட்ட உதவித் தொகை ரூ.6,000-லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித் தொகை, ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு ரூ.1,000 மற்றும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு ரூ.1200 ஆகியவை, ஆண்டிற்கு ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- தொழிலாளர் துறை இணைய முகப்பு மற்றும் வலைதளம் ரூபாய் 2 கோடி செலவில் வடிவமைக்கப்படும் - தொழிலாளர் துறையின் வலைதளம் மற்றும் இணைய முகப்பு ஆகியவை புதுப்பித்து மேம்படுத்தப்படும். மேலும் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் 8 புதிய சேவைகள் இணைய முகப்பில் சேர்க்கப்படும். தொழிலாளர் துறையின் வலைதளமான மொழி பயன்பாட்டிற்கு ஏற்ப இரண்டு கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்படும்.
- தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் 16 இதர நல வாரியங்களுக்கென புதியதாக சொந்த அலுவலக கட்டடம் ரூபாய் 10 கோடி செலவில் கட்டப்படும்.
- தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்புசார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கு என தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள திருவிக இல்லம் எனும் விடுமுறை ஓய்வு இல்லம் ரூ.1.82 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
- தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்பு சார் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கான கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் உள்ள சிங்காரவேலர் இல்லம் எனும் விடுமுறை ஓய்வு இல்லத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் ரூ.2.50 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
- தமிழ்நாடு தொழில்சார் நல வாரியத்தின் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்கு என சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜீவா இல்லம் எனும் ஓய்வு இல்லம் கூடுதல் படுக்கை வசதிகளுடன் ரூ.98.82 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
- தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்புசார் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்குவதற்கென, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு இல்லம் எனும் விடுமுறை ஓய்வு இல்லம் புதுப்பிக்கப்படும்.
- கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு வேலை வழங்குபவர்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
- பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபுணர்களைக் கொண்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
- பட்டாசு உற்பத்தியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளிக் காட்சியினை (வீடியோ) சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியீடு செய்யப்படும்.
- தன்னார்வ பயிலும் மாவட்ட பயிற்சி மையத்தில், திறனறி பலகை (Smart board) வசதி உருவாக்கப்படும்.
- வேலைவாய்ப்புத் துறையின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் துறையின் வலைதளம் மறு சீரமைப்பு செய்யப்படும்.
- அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் பயிற்சி வழங்கப்படும்.
- தேசிய திறன் போட்டிகளில் வென்ற திறன் போட்டியாளர்களுக்கும், சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் திறன் பயிற்சியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் திறன் தொகுப்பு உருவாக்கப்படும்.
- உட்கட்டமைப்பு, பயிற்சி தரம் மற்றும் பணியமர்த்தம் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படும் மற்றும் முதல் மூன்று இடங்களைப் பெறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.