வடகிழக்குப் பருவமழை தொடங்கியபின், சென்னைக்கு குடிநீர் அளிக்கும் ஐந்து ஏரிகளில் ஒன்றான பூண்டி தொடர்ந்து கிருஷ்ணா நதிநீரைப் பெற்றுவருகிறது. பூண்டி ஏரி அதன் கொள்ளளவை எட்டியதால், பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஏற்கனவே ஆந்திர நீர்ப்பாசனத் துறைக்கு கிருஷ்ணா நதிநீரை தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வந்துகொண்டே இருந்தது.
இதுபற்றி, பொதுப்பணித் துறை அலுவலர் கூறுகையில், “ஆந்திர நீர்ப்பாசன அலுவலர்கள் இன்று (பிப். 01) முதல் கிருஷ்ணா நதிநீரை நிறுத்திவைப்பதாகத் தகவல் வந்துள்ளது. வரும் நீரைத் தேக்கிவைக்க இடம் இல்லை என்பதை மறுத்த அலுவலர், கண்டலேறு-பூண்டி கால்வாயில் பராமரிப்புப் பணி நடப்பதற்காக மட்டுமே ஆந்திர அரசை நதிநீரை நிறுத்த கேட்டுக்கொண்டோம்.
கடந்த நான்கு மாதங்களாக, கிருஷ்ணா நதிநீர் 6 டிஎம்சிக்கு மேல் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. எனவே, 149 கிமீ கொண்ட கண்டலேறு-பூண்டி கால்வாயைச் சீரமைக்க வேண்டும். பல இடங்களில் கரைகள் பாதியாக உடைந்துள்ளன. நீர் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால், அணையில் உடைப்பு ஏற்படும். இதனால், ஆந்திர அலுவலர்களைத் தொடர்புகொண்டு நதிநீரை நிறுத்துமாறு கோரியிருந்தோம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பூண்டி ஏரி அதிகளவில் கிருஷ்ணா நதிநீரை பெற்றுள்ளதாகவும், பராமரிப்புப் பணி முடிவடைந்த பின், மீண்டும் நதிநீரை திறக்கக் கோரலாம் எனவும் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற ஒரு சூழ்நிலை வரும்போது, நிச்சயமாக ஆந்திர அரசை நதிநீரைத் திறக்க நாடுவோம் என்றும் உறுதியளித்தார்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 140 அடி ஆகும், இதில் தற்போதைய நிலவரப்படி ஏரியின் கொள்ளளவு 139.96 அடியை எட்டியுள்ளது. இருந்தபோதிலும், கிருஷ்ணா நதிநீர் வரத்து தொடர்ந்துவருவதால், அலுவலர்கள் உபரிநீரை வெளியேற்றிக் கொண்டே உள்ளனர் மற்றும் இணைப்புக் கால்வாயைக் கண்காணித்துவருகின்றனர். அணைக்கு தற்போது 659 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதில், 407 கனஅடி நீர் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு வெளியேற்றப்படுகிறது.