சென்னை: புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் தரமில்லாமல் இருப்பது குறித்த ஆய்வறிக்கையை ஐஐடி குழு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனரிடம் சமர்ப்பித்தது. இக்குழு அடுக்குமாடிக் கட்டடத்தின் தரம் குறித்து 100 இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு தரம் குறித்து 441 பக்கம் கொண்ட அறிக்கையின் 59 பக்க முன் சுருக்க அறிக்கையைத் தாக்கல்செய்தது.
சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இந்தக் குடியிருப்பில் கடந்த இரண்டு மாதங்களாக சுமார் 100 குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.
அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள், தரமில்லாமல் இருப்பது குறித்த செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய துறையின் அமைச்சர் தா.மோ. அன்பரசன், சென்னை ஐஐடியிலிருந்து வல்லுநர் குழு கே.பி. பார்க் குடியிருப்பின் தரத்தை ஆய்வுசெய்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்பிப்பார்கள்" என்று கூறினார்.
இதற்கிடையே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உதவி பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கட்டடத்தின் தரம் பற்றிய இறுதி ஆய்வறிக்கை
கட்டடம் கட்டப்படும்போது அவர்கள் இருவரும்தான் கண்காணிப்புப் பணியில் இருந்ததாகவும், கண்காணிப்புப் பணியைச் சரியாகச் செய்யாத காரணத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஐஐடியுடன் தொடர்புடைய CUBE (Centre for Urbanisation, Building and Environment) என்ற நிறுவனத்திலிருந்து 10-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் கே.பி. பார்க் குடியிருப்பின் கட்டட மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுசெய்ய தொடங்கினர். செப்டம்பர் 15 அன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் முதற்கட்ட 441 பக்க ஆய்வறிக்கையை அந்நிறுவனம் சமர்ப்பித்து.
கே.பி. பார்க் கட்டடத்தின் தரம் பற்றிய முடிவுகள் கொண்ட இறுதி ஆய்வறிக்கையை இன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய யாவர் மீதும் நடவடிக்கைப் பாயும்
மேலும் இக்குழு அடுக்குமாடி கட்டடத்தின் தரம் குறித்து 100 இடங்களில் மாதிரிகள் எடுத்து தரம் குறித்து 441 பக்கம் கொண்ட அறிக்கையின் 59 பக்க முன் சுருக்க அறிக்கையைத் தாக்கல்செய்துள்ளது.
'இறுதி ஆய்வு அறிக்கையில் கட்டடம் தரம் இல்லாமல் இருப்பது உறுதியானால் கட்டட ஒப்பந்ததாரர் உள்பட இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை பாயும்' என்று தா.மோ. அன்பரசன் கூறியுள்ள நிலையில், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையாக இரண்டு ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆந்திராவைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது