சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அரசு அமைத்த குழுவை எதிர்த்து பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கை இன்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கரு. நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றுத் தருவோம் எனக் கூறிவிட்டு தற்போது நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசினால் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இந்தக் குழு நீட் தேர்வுக்கு எதிரான எந்தவித ஆராய்ச்சியிலும் ஈடுபடவில்லை.
இந்தக் குழுவால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு நடைபெறும் என்று உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதன்மூலம் திமுகவின் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசிக தலைவர் திருமாவளவன் கூறுவதுபோல இந்தத் தேர்வினால் தொற்று பரவாது. மால்கள், மார்க்கெட்டுகள் என அனைத்தும் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் தேர்வு நடத்துவதில் தவறில்லை. எங்களது முழு நோக்கம் மாணவர்கள் குழப்பும் அடைய கூடாது என்பதுதான். தமிழ்நாட்டின் ஒரு குடிமகன் என்ற முறையில் வழக்குத் தொடர்ந்தேன்.
தற்போது இந்தக் குழுவினால் நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற பாஜகவின் கருத்தையே உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் நீட் தேர்வு குறித்த இந்த குழு முழுக்க முழுக்க அரசியல் நாடகம்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 25 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவச் சீட்டு கிடைக்காமல் தவித்தால் இதைச் சரிசெய்யும் விதமாக கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. கடந்த காலங்களில் தமிழ்நாடு அரசால் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட குழுவானது மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை கட்டுப்படுத்தும். இதுதவிர மத்திய அரசு நடத்தக்கூடிய தேர்வு முறைகளை கட்டுப்படுத்தாது” என்றார்.