முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பியுமான கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ப.சிதம்பரத்தின் வீடு அவரது அலுவலகம் என 3 இடங்கள், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசாவில் 1 இடம், மும்பையில் 3 இடங்கள் என மொத்தம் இந்தியா முழுவதும் 9 இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகின்றனர்.
சீன நாட்டினர் 250 பேருக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நடத்திய அதே தேதியில் இன்றும் சிபிஐ சோதனை நடத்துவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேதியை மறக்க முடியாது : கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக வழக்குபதிவு செய்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு சிதம்பரம் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.இதனை நினைவுபடுத்தும் விதமாக ப.சிதம்பரத்தின் மகனான எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று(மே.17) அதிகாலை 2.55 மணியளவில் டுவிட்டரில் ”இந்த தேதியை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிபிஐ மீண்டும் சோதனை நடத்துவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெட்டிசன்களின் கருத்து : சிபிஐ சோதனை நடத்தப்போவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு கார்த்தி சிதம்பரம் டுவிட்டை பதிவிட்டாரா? அல்லது டுவிட்டை பார்த்து சிபிஐ சோதனை நடத்துகிறார்களா? என சந்தேகம் எழுந்துள்ளதாக நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
சிபிஐ சோதனை நடந்து வரும் வேளையில் எத்தனை முறை தான் சோதனை, கணக்கிலே இல்லை என கிண்டலடித்து கார்த்தி சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ப. சிதம்பரம் பதிவிட்ட டிவிட்டில் சிபிஐ எப்.ஐ.ஆர் காட்டிய போது அதில் எனது பெயர் இல்லை எனவும் சோதனையின் போது எந்த ஆவணங்களையும் கைப்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் எங்கு உள்ளார்..? சிபிஐ சோதனை நடைபெறும் நிலையில் ப. சிதம்பரம் டெல்லியிலும், அவரது மனைவி நளினி சிதம்பரம் சோதனை நடைபெறும் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டிலும் உள்ளனர். கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினருடன் லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பலத்த காவல்துறை பாதுகாப்போடு வெளியாட்களை உள்ளே அனுமதிக்காமல் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை - பின்னணி என்ன ?