எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கடந்த 3 நாட்களாக தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், " நானும் ரஜினியும் பல ஆண்டு நண்பர்கள். அரசியல் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் வெளியிட்ட அறிக்கை எனக்கு முன்பே தெரியும். அரசியலைவிட அவரது உடல் நலம்தான் முக்கியம். என் கட்சிக்காக நண்பர் ரஜினியிடம் நான் ஆதரவு கேட்டேன்.
சென்ற ஆண்டு தேர்தல் வாக்கு அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் நாங்கள் தான் 3 ஆவது பெரிய கட்சி. ஓராண்டில் 1 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர். சகாயம் ஐஏஎஸ் போன்றவர்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் வரவேற்போம். அடுத்த ஆண்டு மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக சட்டப்பேரவையில் ஒலிக்கும். நடைமுறையில் இல்லாத மனுநூல் குறித்து பேச வேண்டியதில்லை. வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த காவல்துறைக்கு நன்றி.
வேலையின்மை, குடிநீர் பிரச்சனைகள் குறித்து நாம் முதலில் பேச வேண்டும். 2 நாள் மழைக்கே சென்னை தெப்பக்குளம் ஆகி விட்டது. இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய தேவையுள்ளது. ஆயுள் தண்டனை 14 ஆண்டுகள் தான், அதனை 7 பேரும் முடித்து விட்டார்கள். எனவே, அவர்களின் விடுதலை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்றார்.
தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மறைமுகமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், கமலும் அவனது கட்சியும் வெவ்வேறல்ல என்றும், வாய்ப்பு எங்கு கிடைத்தாலும் அங்கு மக்களுக்காக பேசுவேன் எனவும் கூறினார்.
இம்மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் திருச்சி மற்றும் மதுரையிலும், டிசம்பர் 12, 13 தேதிகளில் கோவை மற்றும் சேலத்திலும் கமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எண்ணெய்க்குழாய் பதிக்க வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடுக - வைகோ